ஏ.டி.எம் கொள்ளை வழக்கு:நீதிமன்றத்திலிருந்து தப்பியவர்களை அதிரடியாக மடக்கி பிடித்த போலீசார்
ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து செல்லப்பட்ட போது தப்பி சென்ற வடமாநில இளைஞர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
நெல்லை,
நெல்லை மாநகரின் மையத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இந்த எந்திரத்தில் சமீபத்தில் நூதன முறையில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் பேரில் முப்பட் மற்றும் சலீம் என்ற இரு வட மாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.இருவரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்ஆவர். விசாரணையில் இந்த இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.மேலும் விசாரணையில் இவர்களின் நூதன திருட்டும் தெரியவந்தது.
அதன்படி, இருவரும் ஏ.டி.எம் எந்திரத்திக்கு செல்வர். கார்டை எந்திரத்தில் போட்டு எவ்வளவு பணம் வேண்டும் என்பதை பதிவு செய்வர். பின்னர் எந்திரம் பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே எந்திரத்தை அணைத்து விடுவார். பின்னர் அதனை ஆன் செய்யும் போது, எந்திரமானது ஆப் செய்யும் போது எவ்வளவு பணத்தை எண்ணி இருந்ததோ அதனை அப்படியே வெளியே தள்ளும். இதனால் அவர்களின் கணக்கில் உள்ள பணம் குறையாது. இந்த முறையை பயன்படுத்தி பலமுறை திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இருவரையும் வழக்கு பதிவு செய்யது கைது செய்தனர். இந்நிலையில் இன்று காலை இருவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது எதிர்பாராதவிதமாக இருவரும் தப்பி ஓடினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் மிகத் தீவிரமாக தேடினர். இதில் பாளையங்கோட்டை கல்லூரி அருகே சலீமையும் , சாந்தி நகர் பகுதியில் முப்பட்டையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தப்பி ஓடியவர்களை 4 மணி நேரத்தில் பிடித்து நெல்லை போலீசார் அதிரடி காட்டினர்.