ஏ.டி.எம். எந்திரத்தில் கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்தன
கறம்பக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கறம்பக்குடி:
கிழிந்த நோட்டுகள் வந்தன
கறம்பக்குடி சீனிகடை முக்கம் கச்சேரி வீதியில் தனியார் நிறுவன ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. பிரதான பகுதியில் இந்த ஏ.டி.எம்.எந்திரம் உள்ளதால் மற்ற வங்கி ஏ.டி.எம் மையத்தை விட இந்த எந்திரத்தை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் நேற்று இடையங்காடு கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண் ரூ.2 ஆயிரம் எடுத்தார்.
அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்பதால் மீண்டும் ரூ.2 ஆயிரம் எடுத்த போதும் அந்த நோட்டுகளும் கிழிந்து தீப்பட்ட நோட்டுகளாகவே இருந்தன. அது குறியிட்ட வங்கியின் ஏ.டி.எம். இல்லை என்பதால் வங்கியிலும் அவர் புகார் செய்ய முடியாமல் தவித்தார். இது போல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த நோட்டுகள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் அவசர தேவைக்காகதான் பொதுமக்கள் ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்கின்றனர். ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற ஏ.டி.எம்.மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.