வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகத்தில் 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
x

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 17-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

மிக்ஜம் புயலால் வடதமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. இந்த புயல் ஆந்திரா அருகே கரையை கடந்ததும், தமிழகத்தில் மழை வெகுவாக குறைந்தது. தற்போது, வட மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் தங்கச்சிமடம், பாம்பன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 5 செ.மீ. மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 17-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழடுக்கு சுழற்சி

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 17-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் பதிவாகும். குறைந்தபட்சம் 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் பதிவாகும். வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் 11-ந் தேதி (நேற்று) வரையிலான காலக்கட்டத்தில் 38 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது, இயல்பைவிட 3 சதவீதம் குறைவு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story