அட்சயலிங்கசாமி கோவில் பங்குனி தேரோட்டம்
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அட்சயலிங்கசாமி கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது. இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அட்சயலிங்கசாமி கோவில்
நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற அட்சயலிங்கசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கியது. விழாவில் தினமும் அஞ்சுவட்டத்தம்மன் சிம்மவாகனம், அன்னபட்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது.
பங்குனி தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு நடந்தது. இதில் தேரில், அஞ்சுவட்டத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 4 வீதிகளில் சாமி வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ், தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் ராமு, உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், தாசில்தார் ரமேஷ்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் குகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
அறநிலையத்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.