மாடுகள் மேய்த்ததை தட்டி கேட்டதால் தகராறு:பெண் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்மூதாட்டி கைது
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் மாடுகள் மேய்த்ததை தட்டி கேட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண் மீது மிளகாய் பொடியை தூவி தாக்கிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மாடுகள் மேய்த்ததில் தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காமன்தொட்டி அருகே உள்ள பாதக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடலட்சுமி (வயது48). இவருக்கு சொந்தமான நிலம் கிருஷ்ணகிரி அடுத்த பாலக்குறி கிராமத்தில் உள்ளது. 17-ந் தேதி இரவு வெங்கடலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் அவரது உறவினர்கள் மாடுகளை மேச்சலுக்கு விட்டு உள்ளனர்.
அப்போது அங்கு வந்த வெங்கடலட்சுமி அவர்களிடம் தட்டி கேட்டுள்ளார். இப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர்களான லட்சுமி (60), கல்யாணி (32) ஆகியோர் வெங்கடலட்சுமியை தாக்கி சுடு தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து உடல் மீது ஊற்றி உள்ளனர். மேலும் மிளகாய் பொடியை முகத்தில் தூவினர்.
மூதாட்டி கைது
இதில் வெங்கடலட்சுமி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின்ேபரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி லட்சுமியை கைது செய்தனர். கல்யாணியை தேடி வருகின்றனர்.