பாலக்கோட்டில் இரு தரப்பினர் மோதல்
பாலக்கோடு:
பாலக்கோட்டில் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் டிக்கெட் எடுத்து கொண்டு ராட்டினத்தில் ஏறினர். அப்போது ராட்டினத்தை முழுமையாக இயக்காமல், 2 சுற்று குறைவாக இயக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த வாலிபர்கள், ராட்டின ஊழியர்களிடம் தெரிவித்து, மீண்டும் இயக்க வலியுறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இருதரப்பினரும் மோதிக்கொண்ட காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.