சென்னை வக்கீல் கொலை:கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேர் மீது தாக்குதல்விழுப்புரத்தில் பரபரப்பு
சென்னை வக்கீல் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரை வக்கீல்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல் கொலை
சென்னை பெருங்குடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 33). இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந்தேதி இரவு 9 மணியளவில் ஜெய்கணேசை மர்ம கும்பல், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
சிறையில் அடைக்க எதிர்ப்பு
இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை நுங்கம்பாக்கம் தெற்கு மாடவீதியை சேர்ந்த வேலு மகன் பிரவீன் என்கிற மீன் பிரவீன் (23), நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் முருகன் (26), சென்னை மண்ணூர்பேட்டையை சேர்ந்த சின்னசாமி மகன் ஸ்ரீதர் (27) ஆகிய 3 பேரும் நேற்று காலை விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
அப்போது, அவர்களது சரண்டரை ஏற்கக்கூடாது என்றும், 3 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நீதிபதியிடம் விழுப்புரம் வக்கீல்கள் முறையிட்டனர்.
3 பேர் மீது தாக்குதல்
இந்த சூழலில் சரண் அடைந்த 3 பேரையும் வருகிற 5-ந் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். அதன்படி, 3 பேரையும், கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்களை கண்டித்து வக்கீல்கள் கோஷம் எழுப்பியதோடு சில வக்கீல்கள், அந்த 3 பேர் மீதும் தாக்குதல் நடத்தினர். உடனே போலீசார், வக்கீல்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வக்கீல்களை போலீசார் தடுத்து நிறுத்தி அந்த 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் வேனில் ஏற்றிச்சென்று வேடம்பட்டில் உள்ள மாவட்ட மத்திய சிறையில் அடைத்தனர்.