கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்
கயத்தாறு அருகே கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை(வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் அங்குள்ள மணிகண்ட ஐயர் என்பவரது வீட்டில் வேலை செய்து வந்தார். இவர், அதே ஊரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கோபிகிருஷ்ணன்(23), சன்முகசுந்தரம் மகன் மாரியப்பன் என்ற விக்னேஷ்(20) ஆகியோரை கட்டிட வேலைக்கு கூப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுடலைக்கும், அந்த 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுடலை கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு 2 பேரும் வந்துள்ளனர். திடீரென்று அவரை 2 பேரும் அடித்து உதைத்துள்ளனர். இதில் காயமடைந்த அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த சுடலை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் பால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கோபிகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவில்பட்டி ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி அந்த 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.