முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தம்பதி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆயிலவாடி கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 45), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.
இவர், ஊராட்சிக்கு சொந்தமான மரங்களை ஏலம் எடுத்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து மரங்களை வெட்டியுள்ளார். அப்போது தனுஷ் (50) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள மரங்களையும் வெட்டியதாக கூறப்படுகிது. இதனால் தனுஷ், அவரது மனைவி ராஜம்மாள் (45), இவர்களது மகன் அருள்திருமலை (23) ஆகியோர் ஏன் எங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுகிறீர்கள். அரசுக்கு சொந்தமானது என்றாலும் எங்கள் பராமரிப்பில் உள்ளது. இதை வெட்டக்கூடாது என தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனுஷ், ராஜம்மாள், அருள்திருமலை ஆகியோர் சேர்ந்து மோகனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தனுஷ், ராஜம்மாள், அருள்திருமலை ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.