தொழிலாளி மீது இரும்பு கம்பியால் தாக்குதல்
நடுரோட்டில் தகராறு செய்த தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 30), தொழிலாளி. நேற்று காலையில் மது அருந்திய அவர் கோவை-திருச்சி சாலையில் நின்று கொண்டு தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதுடன், அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய ராஜா, அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் ராஜாவை தாக்கினார்கள். இதில் தலையில் காயம் ஏற்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.இது குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவரை தாக்கிய ஒருவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.