அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்


அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை கணிதம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் விருத்தாசலத்தை சேர்ந்த ஆகாஷ், நேற்று மாலை கல்லூரி கலையரங்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி வளாகத்தில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் திடீரென ஆகாசை சராமாரியாக தாக்கினர். இதனை தட்டிக்கேட்ட சக மாணவர்களையும் அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்கினர். மேலும் இதுபற்றி அறிந்து வந்த ஆகாசின் தந்தை பாலுவையும் அவர்கள் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே இந்த தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள், அங்கிருந்து தப்பி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது, நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹரி, சதீஷ்குமார் என்பதும், அவர்கள் இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது. கடந்த வாரம் கஞ்சா போதையில் இருந்த சதீஷ்குமார் கும்பல், நாச்சியார்பேட்டை கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எ.வடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், இளவரசன் ஆகியோர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஹரி, சதீஷ்குமார் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். கல்லூரி மாணவர்களை கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.


Next Story