தமிழக மீனவர் மீது தாக்குதல், இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக மீனவர் மீது தாக்குதல், இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக மீனவர் மீதான தாக்குதல், இந்தி திணிப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார்.

சென்னை,

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையின் துப்பாக்கி சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றுக்காக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, முதன்மை செயலாளர் உஞ்சைஅரசன், ஏ.சி.பாவரசு, துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, மாவட்ட செயலாளர்கள் வி.கோ.ஆதவன், நா.செல்லதுரை, ரா.செல்வம் உள்பட ஏராளமானோர் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்து மதத்துக்குள் ஒரே கலாசாரம்

ஆர்ப்பாட்டத்தில், தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. பா.ஜ.க. மத அரசியலை புகுத்தி இந்தியாவை இந்து தேசமாக கட்டமைக்க பார்க்கிறது. இந்து தேசத்தை அமைத்துவிட்டால் அது சனாதன தேசியம் ஆகிவிடும். இந்தியா முழுவதும் ஒரே தேசம் ஒரே கலாசாரம் கொண்டுவர துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து மதத்திற்குள்ளேயே ஒரே கலாசாரத்தை கொண்டு வருமா?.

வி.சி.க. தலைமையில் நடக்கும்

இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் வீரவேல் குடும்பத்திற்கு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு வழங்குவதோடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசை பாராட்டுகிறோம். ஆனால், அதோடு நில்லாமல் அவர்களை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழ், இந்தி உள்பட 22 மொழிகள் தேசிய மொழிகளாக உள்ளன. இதில், இந்திக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை. மீண்டும் ஒரு மொழி போராட்டத்தை முன்னெடுக்க வழி வகுக்கவேண்டாம் என மோடி அரசை எச்சரிக்கிறோம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திராவிட கட்சிகள் தான் முன்னெடுக்கும் என்று இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கும். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இனி ஒரு மொழிப்போர் நடக்கும் என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில்தான் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story