போலீஸ் ஏட்டுவை கீழே தள்ளி தாக்க முயன்ற இன்ஸ்பெக்டர் கடலூர் அருகே பரபரப்பு
கடலுாில் போலீஸ் ஏட்டுவை கீழே தள்ளி இன்ஸ்பெக்டர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சிதம்பரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை 9.15 மணியளவில் கடலூர் ரெட்டிச்சாவடி வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அருகே சின்னகங்கணாங்குப்பத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வாகனம் சென்ற பிறகு, போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்தனர்.
அங்கு காலில் காயமடைந்திருந்த போலீஸ் ஏட்டு ஒருவர், மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு காரில் வந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ஏட்டுவை ஒழுங்காக பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த தேவேந்திரன், அந்த ஏட்டுவை நெட்டி கீழே தள்ளி தாக்க முயன்றார்.
உடனே சக போலீசார், இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நடுரோட்டில் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் இச்சம்பவம் தொடர்பாக உடனே விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.