தாரமங்கலத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி


தாரமங்கலத்தில்   கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
x

தாரமங்கலத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

சேலம்

தாரமங்கலம்,

தாரமங்கலத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 3 உண்டியல்களை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறந்து பணம், நகைகள் கணக்கிடப்படும். ஒரு உண்டியல் அன்னதான திட்டத்திற்கு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ந் தேதிகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அன்னதானம் நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் கண்காணிப்பு கேமராக்களை வேறு திசையில் திருப்பிவிட்டு உண்டியலை உடைக்க முயற்சித்துள்ளனர். 3 உண்டியல்களுக்கு அலாரம் இணைக்கப்பட்டு இருந்ததால் அன்னதான உண்டியலை மட்டும் உடைத்துள்ளனர். காலையில் கோவிலுக்கு வந்த பூசாரிகள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த அதிகாரிகள் அன்னதான உண்டியல் கடந்த 25-ந் தேதி திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரத்தை எடுத்து விட்டதால் தற்போது பெரிய அளவில் காணிக்கை இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அலாரம் இருந்ததால் மற்ற 3 உண்டியல்களும் தப்பி உள்ளன என்றும் தெரிவித்தனர். இதுபற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story