கூலிப்படையினர் உள்பட 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவரை கொலை செய்ய முயன்ற கூலிப்படையினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் மர்ம நபர்கள்
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் தரணி முருகேசன். இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் இரவில் கேணிக்கரை பகுதியில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது 2 மர்ம நபர்கள் முககவசம் அணிந்தபடி மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இதனை தொடர்ந்து தரணி முருகேசன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கையில் ஆயுதங்களுடன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரின் ஆதரவாளர்கள் மர்ம நபர்களை மடக்கி பிடித்து விசாரித்தபோது முரணாக பேசி உள்ளனர். அவர்களை பிடிக்க முயன்றபோது தரணி முருகேசனின் மேலாளர் கணேசன் (வயது 45) லேசான காயம் அடைந்தார். மேலும் மர்ம நபர்களுக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் அவர்களை தாக்க முயன்றனர். இதனால் பா.ஜ.க.வினரும் மர்ம நபர்களை தாக்கினர்.
கூலிப்படை
இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து 2 நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த மோகன் (34), சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் சுரேஷ் என்ற கப்பலேஷ் சுரேஷ் (35) என்பதும், கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களை ராமநாதபுரத்தின் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி மற்றும் அவரின் ஆதரவாளர் தரப்பில் தரணி முருகேசனை கொலைசெய்ய அனுப்பியதாகவும், இதற்கு ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியை சேர்ந்த பாலா என்ற சேட்டை பாலா ஏற்பாடு செய்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் முன்னாள் நிர்வாகி கதிரவன், சண்முகநாதன், விக்கி என்ற விக்னேசுவரன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். கைதான மோகன் மீது 17 வழக்குகளும், சுரேஷ் மீது 7 வழக்குகளும், சேட்டை பாலா மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் பா.ஜ.க.வினர் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையை நேரில் சந்தித்து அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.