குடிபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொல்ல முயற்சி
தூத்துக்குடியில் குடிபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 38). இவர் எட்டயபுரம் ரோடு சாமி பல்க் அருகே மதுபோதையில் நின்று கொண்டு இருந்தாராம். அங்கு குடிபோதையில் வந்த சோட்டையன்தோப்பை சேர்ந்த சுப்பையா மகன் வேல்முருகன் (38) என்பவருக்கும், இஸ்மாயிலுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், தான் வைத்து இருந்த சுத்தியலால் இஸ்மாயில் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த இஸ்மாயில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். வேல்முருகனும் போதையில் தள்ளாடி அதே பகுதியில் விழுந்து விட்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த இஸ்மாயிலை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.