கழுத்தை அறுத்து மூதாட்டியை கொல்ல முயற்சி


கழுத்தை அறுத்து மூதாட்டியை கொல்ல முயற்சி
x

செலவுக்கு பணம் கொடுக்காததால், கழுத்தை அறுத்து மூதாட்டியை கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் மதன்ராசு (வயது 39). இவர், கஞ்சா கடத்தல் வழக்கில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவிட்டு 4 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையாகி சொந்த ஊருக்கு வந்தார். ஆனால், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இவர், தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியில் உள்ள தனது பாட்டி ஈஸ்வரி வீட்டுக்கு சென்றார். அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால், ஈஸ்வரி தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால், அவருடன் தகராறு செய்த மதன்ராசு, அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து ஈஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

ரத்த காயத்துடன் கிடந்த ஈஸ்வரியை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய உறவினர் நாகேந்திரன் (32) பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்ராசுவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story