அமைச்சர் சிவெகணேசன் வீட்டை முற்றுகையிட முயற்சி: விருத்தாசலத்தில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா 300 பேர் கைது


அமைச்சர் சிவெகணேசன் வீட்டை முற்றுகையிட முயற்சி: விருத்தாசலத்தில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா 300 பேர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:45 PM GMT)

விருத்தாசலத்தில் அமைச்சர் சி.வெ. கணேசன் வீட்டை முற்றுகையிட சென்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பாக 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் கடந்த 26-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு போராட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே இடத்தை மாற்றி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்போன் விளக்கை ஒளிரவிட்டப்படி

இந்நிலையில் நேற்று மதியம் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் விருத்தாசலம் பாலக்கரையில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் தில்லைநகரில் உள்ள அமைச்சர் சி.வெ.கணேசன் வீட்டை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல முயன்றனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள், அனைவரும் சாலையோரம் மனித சங்கிலி போல நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் தங்களிடம் இருந்த செல்போன் விளக்கை ஒளிரவிட்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

300 தொழிலாளர்கள் கைது

பின்னர் மீண்டும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் தலைமையில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் அமைச்சர் வீட்டினை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போதும் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள், அமைச்சர் சி.வெ.கணேசனை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 தொழிலாளர்களை போலீசார் கைது செய்து 2 பஸ்களில் ஏற்றி விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

நடவடிக்கை இல்லை

இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் சேகர் நிருபர்களிடம் கூறுகையில், என்.எல்.சி. தொழிலாளர்கள் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தில் 2 அமைச்சர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உரிய பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண மறுக்கிறார்கள். அமைச்சர் சி.வெ.கணேசனிடம் மனு கொடுத்தோம். இதற்கு கமிட்டி அமைப்பதாகவும், மத்திய தொழிலாளர் நலத்துறையிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். அவர் வாக்குறுதி கொடுத்து ஓராண்டாகிவிட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை சந்திக்க வந்ததற்காக போலீசார் எங்களை கைது செய்துள்ளனர். இதுதான் இன்றைய தொழிலாளர் நலத்துறையின் லட்சணமாக உள்ளது என்றார்.


Next Story