காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி


காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி
x

செஞ்சி அருகே காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே உள்ள மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகன் சந்தோஷ்(வயது 19). இவருக்கும், விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வரும் 17 வயதுடைய மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியின் பெற்றோர், சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டனர். எனவே மாணவி, தனது அண்ணனுடன் வீட்டில் வசித்து வருகிறார். சந்தோஷ், அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

காதலிக்க வற்புறுத்தல்

தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும்போது சந்தோஷ், வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அந்த மாணவியோ அவரை காதலிக்க மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி இரவு மாணவி வீட்டில் தனியாக படுத்து இருந்தபோது சந்தோஷ் கதவை தட்டியுள்ளார். உடனே மாணவி கதவை திறந்து, எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அவர், உன்னை பார்க்க வந்ததாக கூறிவிட்டு சென்று விட்டார்.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இரவு சந்தோஷ், மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, கூச்சலிட்டார். உடனே சந்தோஷ் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை கைது செய்தனர்.


Next Story