திருட வந்த வீட்டில் நகைகள் இல்லாததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் கடலூரில் பரபரப்பு


திருட வந்த வீட்டில் நகைகள் இல்லாததால்  கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன்  கடலூரில் பரபரப்பு
x

கடலூரில் திருட புகுந்த அரசு ஊழியரின் வீட்டில் நகைகள் ஏதும் இல்லாததால், கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் சிக்கினான்.

கடலூர்



கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் 47 வயதான அரசு ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு வீட்டின் பின்பக்க கதவை மூடாமல், வராண்டாவில் படுத்து தூங்கினார். மேலும் அவரது மூத்த மகள் வீட்டில் உள்ள ஒரு அறையிலும், இளைய மகளான 19 வயதுடைய கல்லூரி மாணவி வராண்டாவிலும் தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அரசு ஊழியர் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், நகைகள் மற்றும் பணம் ஏதும் இருக்கிறதா? என வீடு முழுவதும் தேடியதாக கூறப்படுகிறது. இதில் நகை, பணம் ஏதும் இல்லாததால், அந்த சிறுவன் வீட்டில் இருந்து வெளியே செல்ல முயன்றதாக தெரிகிறது.

பலாத்காரம்

அந்த சமயத்தில் வராண்டாவில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியின் மீது சிறுவனின் பார்வை திரும்பியது. உடனே அந்த சிறுவன், மாணவியின் வாயை பொத்தி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். இதில் அந்த மாணவி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு எழுந்த அரசு ஊழியர், அந்த சிறுவனை பிடிக்க முயன்றார். அப்போது அவன் அங்கிருந்து தப்பி ஓடினான். மேலும் அவனுடன் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த மேலும் 2 சிறுவர்களும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இதனால் அந்த சிறுவன் தனது நண்பர்கள் 2 பேருடன் அரசு ஊழியர் வீட்டில் திருட வந்ததும், வீட்டில் நகைகள் ஏதும் இல்லாததால் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து அரசு ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர்.

சிக்கிய சிறுவன்

இதற்கிடையே நேற்று மதியம் தேவனாம்பட்டினம் முனிஸ்வரன் கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பதும், அரசு ஊழியர் வீட்டில் புகுந்து திருட முயற்சித்ததும், அவரது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story