கோபி அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி;கிராம நிர்வாக அலுவலர் கைது
கோபி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்
கோபி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
கிராம நிர்வாக அலுவலர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் திருமணமாகி கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். பொலவபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் கடம்பூர் மலைப்பகுதி குன்றியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவரை அந்த பெண் சந்தித்து தனக்கு வேலை வழங்குமாறும், இதற்காக உங்கள் வீட்டுக்கு வந்து நான் படித்த சான்றிதழ்களை தருகிறேன் என்றும் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர், "நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம். நானே உங்கள் வீட்டுக்கு வந்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பலாத்கார முயற்சி
இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் நேற்று முன்தினம் அந்த பெண்ணின் வீட்டு்க்கு சென்று சான்றிதழ்கள் கேட்டுள்ளார். வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த பெண் சான்றிதழ்கள் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அவரை முருகேசன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். சற்றும் எதிர்பாராத வகையில் அவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர்.
கைது
பொதுமக்கள் வருவதை பார்த்ததும் கிராம நிர்வாக அலுவலர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் நேற்று கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெண்ணை கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.