வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு 'சீல்' வைக்க முயற்சி


வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகளிடம் வாடகைதாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகளுக்கு வைத்துள்ள வியாபாரிகள் பலர், நீண்ட நாட்களாக வாடகை பாக்கியை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை அதிக வாடகை நிர்ணயம் செய்ததாக கூறி, கடை வாடகைதாரர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் வைத்துள்ள 27 பேர் வாடகை தொகையாக ரூ.1 கோடியே 30 லட்சம் நிலுவை வைத்துள்ளனர். இதில், அதிகபட்ச வாடகை பாக்கி வைத்துள்ள 2 கடைகளை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

சீல் வைக்க முயற்சி

இதற்காக நேற்று காலை அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி தலைமையிலான அதிகாரிகள், சம்பந்தப்பட்ட 2 வாடகை கடைகளையும் பூட்டி 'சீல்' வைக்க முயன்றனர். அப்போது, வாடகை கடைக்காரர்கள் அங்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இதில், அதிகபட்சமாக வாடகை பாக்கி வைத்துள்ள ஒரு கடைக்காரர் ரூ.5 லட்சமும், மற்றொரு கடைக்காரர் ரூ.2 லட்சமும் உடனடியாக செலுத்தினர். மீதமுள்ள தொகையை விரைவில் செலுத்துவதாக அவர்கள் கூறினர். இதையடுத்து கடைக்கு'சீல்' வைக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story