திருப்பத்தூர் கலெக்டரின் கார், அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி


திருப்பத்தூர் கலெக்டரின் கார், அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி
x

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் கலெக்டர் கார் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஆண்டியப்பனூர் அணை கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்காததால் கலெக்டர் கார் மற்றும் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பத்தூர் தாலுகா ஆண்டியப்பனூர் கிராமத்தில் அணை கட்டுவதற்காக 22 ஆண்டுகளுக்கு முன்பு 311 விவசாயிகளுடைய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி வேலூர் சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி வழங்காததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஐகோர்ட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அப்போதும் இழப்பீடு வழங்கப்படாததால் 4 விவசாயிகள் இழப்பீடுத் தொகை ரூ.1 கோடியே 56 லட்சத்து 5,658 வழங்கக் கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு

இதனை விசாரித்த நீதிபதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார், ஆண்டியப்பனூர் அணைக்கு சொந்தமான பயணியர் விடுதி, கார்கள், அலுவலகத்தில் பயன்படுத்திவரும் கம்ப்யூட்டர்கள், மேசை, நாற்காலி உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வேலூர் சிறப்பு சப்-கோர்ட்டு அமீனா திருப்பதி, வழக்கறிஞர் ரவிக்குமார் இருவரும் விவசாயிகளுடன் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் காரை ஜப்தி செய்வதற்கான நோட்டீசை ஒட்டினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் விவசாயிகளின் வழக்கறிஞர் ரவிக்குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 15 நாட்களில் உரிய தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதால் ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

உடனடியாக வழங்க வேண்டும்

இதுகுறித்து விவசாயிகளின் வழக்கறிஞர் ரவிக்குமார் கூறுகையில் ஆண்டியப்பனூர் அணை கட்ட 22 ஆண்டுகளுக்கு முன்பு 311 விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு ரூ.106 கோடி இழப்பீடு வழங்க வேலூர் சிறப்பு சப்- கோர்ட்டு உத்தரவிட்டது. அதை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்து உள்ளது. எனவே உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறினார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் காரை ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story