பழனியில் காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
பழனியில் ராகுல்காந்தி மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் நேரு (வயது 32). இவர், இளைஞர் காங்கிரசில் மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். இந்தநிலையில் நேரு நேற்று பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தபால் அலுவலக பகுதிக்கு வந்தார். அப்போது அவர் சாலையில் நின்றபடி, அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற சூரத் கோர்ட்டு தீர்ப்புக்கு தடை கோரிய ராகுல்காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினார். சிறிது நேரத்தில் தனது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து, உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதற்கிடையே அங்கு வந்த பழனி டவுன் போலீசார், விரைந்து செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற நேருவை தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கிய போலீசார், அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் நேருவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேருவை கைது செய்தனர். இந்த சம்பவம் பழனியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.