உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி


உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி
x

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி ராமு (வயது 56). இவர் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்றபோது, திடீரென தனது பையில் தண்ணீர் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மீஹா மற்றும் போலீசார் விரைந்து சென்று பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி, ராமு மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர் கண்கள் எரிகிறது என்று சொன்னதால் இன்ஸ்பெக்டர் மீஹா தனது கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து ராமு முகத்தை துடைத்தார். பின்னர் அவரை அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தார். கலெக்டரிடம் ராமு கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தனது கணவருடன் கடந்த 2003-ம் ஆண்டு முதல் மேலப்பாளையத்தில் வசித்து வருகிறேன். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டை காலி செய்யுமாறு எங்களை மிரட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நபர் மகன்களுடன் வந்து வீட்டை காலி செய்ய கூறினார். நான் மறுக்கவே என்னை தாக்கி விட்டு சென்றுவிட்டார்கள். இது குறித்து அவர் மீது மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது வீட்டு பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தற்போது பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் கொடுப்பது கிடையாது. இதனால் ராமு எப்படி? பெட்ரோலை பாட்டிலில் வாங்கி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story