500 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயற்சி
வேப்பூர் அருகே 5 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
வேப்பூர் அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டைகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மங்களூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி (38) இவருடைய மருமகன் காசிலிங்கம் (25), சரக்கு வாகன டிரைவர் பாலமுருகன் ஆகியோர் என்பது தெரிந்தது.
பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களையும் பறிமுதல் செய்யப்படட ரேஷன் அரிசியையும் குடிமை பொருள் கடத்தல் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம் போலீசார் ஒப்படைத்தனர் மேலும் தப்பி ஓடிய பழனிவேல் என்பவரை தேடி வருகின்றனர்.