பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறிக்க முயற்சி


பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறிக்க முயற்சி
x

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறிக்க முயன்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை பறிக்க முயன்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம்...

கருங்கல் அருகே உள்ள பைங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரன் மனைவி சுஜிதா (வயது 49). இவர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்ததும் சுஜிதா ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். குளச்சல்-கருங்கல் சாலையில் உலகன்விளை அருகே சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மஆசாமிகள் வந்தனர். இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

நகை பறிக்க முயற்சி

சுஜிதாவை நெருங்கியபடி சென்றதும் திடீரென அவருடைய கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க அந்த ஆசாமிகள் முயன்றுள்ளனர். ஆனால் அவர் நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டார். அதே சமயத்தில் மர்மஆசாமிகளுடன் போராடியதால் சுஜிதா ஸ்கூட்டருடன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த பரபரப்புக்கு இடையே அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மர்ம ஆசாமிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

மற்றொரு சம்பவம்

இந்த 2 மர்மஆசாமிகளும் சிறிது தூரம் சென்ற போது எதிரே தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார்.

அப்போது ஒரு கல்லூரி அருகே திடீரென அந்த பெண்ணை வழிமறித்து நகையை பறிக்க முயன்றுள்ளனர். அந்த பெண்ணும் ஸ்கூட்டருடன் கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், நகை பறிக்கும் முயற்சியை கைவிட்டு மர்மஆசாமிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர். பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மற்றொரு பெண்ணிடம் மர்மஆசாமிகள் நகை பறிக்க முயன்ற சம்பவம் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story