வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில் பணமோசடி முயற்சி


வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில் பணமோசடி முயற்சி
x

வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பணமோசடி முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பணமோசடி முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

குறுந்தகவல்

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி செல்போன் எண்ணிற்கு நேற்று காலை வாட்ஸ் அப்பில் ஒரு குறுந்தகவல் வந்தது. எண்ணின் முகப்பு படமாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனின் படம் இருந்தது. அந்த குறுந்தகவல் கலெக்டர் அனுப்பி உள்ளதாக ராமமூர்த்தி கருதினார்.

தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்த வண்ணம் இருந்தது. அதற்கு ராமமூர்த்தியும் குறுந்தகவல் மூலமாகவே பதில் அளித்தார். அந்த குறுந்தகவலில், பரிசு கூப்பன் குறைந்த கட்டணத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் 10 பரிசு கூப்பன்களை வாங்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மோசடி முயற்சி

இந்த குறுந்தகவல் மீது சந்தேகம் அடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உடனடியாக இதுகுறித்து கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜிக்கு தகவல் தெரிவித்தார். அவர் இதுகுறித்து ஆய்வு செய்தபோது கலெக்டர் பெயரில் மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

அந்த எண் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஒருவருடையது என்பது தெரியவந்தது. அந்த எண்ணை அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசியபோது, எண்ணுக்கு சொந்தமான நபர் குறுந்தகவலை நான் அனுப்பவில்லை என்று கூறினார்.

போலீசில் புகார்

பின்னர் மற்றொரு எண்ணில் இருந்து ராமமூர்த்திக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் பெயரை பயன்படுத்தி மர்மநபர்கள் அதிகாரியிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story