சரமாரியாக தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி: படுகாயமடைந்த மூதாட்டி சாவு தொழிலாளி மீது கொலை வழக்குப்பதிவு
சரமாரியாக தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததில் படுகாயமடைந்த மூதாட்டி இறந்தாா்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த பல்லவராயநத்தத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது 43). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 63 வயதுடைய மூதாட்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தண்டபாணி, அவரை சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. உடனே மூதாட்டி சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அப்போது வீட்டில் இருந்த தண்டபாணி வெளியில் தப்பி ஓட முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் தண்டபாணியை பிடித்து நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் பலத்த காயமடைந்த மூதாட்டி புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மூதாட்டியை கற்பழிக்க முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.