அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி
அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது.
சிவகங்கை செந்தமிழ் நகரில் வசிப்பவர் பாண்டீஸ்வரி. இவர் சிவகங்கை நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவு நேரத்தில் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் பீரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் நகை, பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதே போல பாண்டீஸ்வரி வீட்டின் அருகில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன். இவருடைய வீட்டிலும் புகுந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அங்கும் நகை, பணம் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.