தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சி
கந்திகுப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடி விட்டனர்.
பர்கூர்
கந்திகுப்பத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடி விட்டனர்.
தனியார் நிறுவன ஊழியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை சேர்ந்தவர் கிதியோன். இவருக்கு சொந்தமாக மாடி வீடு உள்ளது. இவர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கடந்த 6 மாதமாக பூட்டி கிடந்தது.
இதனால் அவர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் பொருத்தி இருந்தார். மேலும் ஓசூரில் இருந்தவாறு கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனது செல்போன் மூலமாக பார்த்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் 3 பேர் நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர்.
அலாரம் ஒலித்தது
அவா்கள் மோட்டார்சைக்கிளை அந்த பகுதியில் மறைவான இடத்தில் நிறுத்தி விட்டு பட்டாக்கத்திகளுடன் ஒருவர், பின் ஒருவராக உள்ளே வந்தனர். அப்போது கொள்ளையன் ஒருவன் வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே குதிக்க முயன்ற போது அங்கு பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் செய்வதறியாமல் கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அறிந்த கிதியோன் கந்திகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவத்தை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.