கொடைக்கானலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


கொடைக்கானலில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

கொடைக்கானலில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

கொடைக்கானலில், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.டி.எம். மையம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. பொங்கல் விடுமுறை எதிரொலியாக கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு, அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வழக்கம் போல் அதிகாரிகள் பணத்தை நிரப்பி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த ஏ.டி.எம். மையத்துக்கு சிலர் பணம் எடுக்க சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் சில பாகங்கள் திறந்து கிடந்ததோடு, வயர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு தடய அறிவியல் நிபுணர்களும் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ரூ.12 லட்சம்

இதற்கிடையே ஏ.டி.எம். மையம் மற்றும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் 2 மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்று உள்ளனர்.

நீண்ட நேரம் முயன்றும் எந்திரத்தில் பணம் இருக்கும் பகுதியை உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றது தெரியவந்தது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.12 லட்சம் வரை ரூபாய் நோட்டுகளை நிரப்பும் வசதி உள்ளது.

எனவே தொடர் விடுமுறை என்பதால் ரூ.12 லட்சம் வரை நிரப்பி இருக்க வாய்ப்பு உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எடுத்தது போக பல லட்சம் ரூபாய் எந்திரத்தில் மீதி இருந்து இருக்கும்.

கொடைக்கானலில் பரபரப்பு

எந்திரத்தை உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story