கோவில் கருவறைக்குள் புகுந்து கொள்ளை முயற்சி


கோவில் கருவறைக்குள் புகுந்து கொள்ளை முயற்சி
x

களியக்காவிளை அருகே கோவில் கருவறைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே கோவில் கருவறைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணசாமி கோவில்

களியக்காவிளை அருகே குமரி-கேரள எல்லையான மீனச்சல் பகுதியில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை-மாலை என இரு வேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை 8 மணியளவில் வழக்கம்போல் பூஜை நடந்து கொண்டிருந்தது. சாமி தரிசனம் செய்வற்காக அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

கொள்ளை முயற்சி

அப்போது, பூஜை நேரத்தில் பக்தர்போல் ஒரு மர்ம நபர் கோவிலின் கருவறைக்குள் புகுந்து சாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். அதற்குள் பக்தர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வருவதற்குள் அந்த மர்ம நபர் பக்தர்களின் பிடியில் இருந்து தப்பியோடி விட்டார்.

ஆவணம் சிக்கியது

பின்னர், கோவிலின் பின்புறம் சந்தேகப்படும் வகையில் நின்ற ஒரு மோட்டார் சைக்கிளையும் அதில் இருந்த ஆவணங்களையும் பக்தர்கள் பார்த்தனர். அதில், விழுப்புரம் மாவட்டம் அரசம்பட்டு பகுதியை சேர்ந்த தாமோதரன் என்ற முகவரி இருந்தது. அதைதொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர் அந்த ஆவணங்களுடன் மோட்டார் சைக்கிளை களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story