சேலத்தில் நள்ளிரவில் கடைகளில் திருட முயற்சி?-வட மாநில வாலிபர் சிக்கினார்


சேலத்தில் நள்ளிரவில் கடைகளில் திருட முயற்சி?-வட மாநில வாலிபர் சிக்கினார்
x

சேலத்தில் நள்ளிரவில் கடைகளில் திருட முயன்ற வடமாநில வாலிபர் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

உடற்பயிற்சி கூடம்

சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள ஒரு காம்ப்ளக்சில் ஓட்டல், குளிர்பானம், மருந்து, டீக்கடை என ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் அந்த காம்ப்ளக்சில் உள்ள ஒரு டீக்கடையின் கதவை தட்டி உள்ளார். அப்போது கடைக்குள் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் சத்தம் போட்டனர்.

இதையடுத்து வாலிபர் அந்த காம்ப்ளக்சின் வெளிப்புற பூட்டை உடைத்துக்கொண்டு படியில் ஏறி முதல் மாடிக்கு சென்று அதில் செயல்பட்டு வரும் ஒரு சங்க அலுவலக அறையின் பூட்டை உடைத்து அறையின் மின் விளக்குகளை எரிய செய்து உள்ளார்.

அப்போது அதன் மேல் மாடியில் உள்ள உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து கழிவறைக்கு சென்றார். அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்த்து யார் நீ? என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் இந்தியில் பேசியவாறு அங்கிருந்து வேகமாக கீழே இறங்கி சாலைக்கு சென்று உள்ளார். அப்போது ஏதோ மனநலம் பாதித்தவர் என்று எண்ணிய உடற்பயிற்சி நிலைய பயிற்சியாளர் கதவை பூட்டி விட்டு தூங்கி உள்ளார்.

பூட்டை உடைக்க முயற்சி

சிறிது நேரத்திற்கு பிறகு உடற்பயிற்சி கூடத்தின் பூட்டை உடைக்க அந்த மர்ம நபர் முயற்சி செய்து உள்ளார். அது முடியாததால் உடற்பயிற்சி கூடத்தின் கதவை தட்டி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பயிற்சியாளர் கதவை திறக்காமல், சம்பவம் குறித்து உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து உள்ளார். அப்போது அவர் செல்போனில் இருந்து உடற்பயிற்சி கூட வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டார்.

அதில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் கையில் இரும்பு கம்பியை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி கூடத்தின் கதவை தட்டுவதும், பின்னர் அருகில் உள்ள ஒரு கரும்பு சாறு கடையின் முன்பு வைக்கப்பட்டு இருந்த கரும்பை எடுத்து கடித்தவாறும், மாடிப்படியில் ஏறி, இறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து உடற்பயிற்சி கூட உரிமையாளர் செல்போன் மூலம் பயிற்சியாளரை தொடர்பு கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறக்க வேண்டாம் என்று கூறி உள்ளார்.

விசாரணை

பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் திருடும் முயற்சியில் ஒருவர் கதவை உடைத்துக்கொண்டு நின்று கொண்டு உள்ளார் என்று அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காம்ப்ளக்சில் சுற்றிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனது பெயர் மோகன் என்று இந்தியில் பேசி உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தும் போது அவர் மனநலம் பாதித்தவர் போல் சரியான பதில் அளிக்க வில்லை. இதையடுத்து போலீசார் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது பிடிபட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்று இந்தியில் பேசுகிறார். அவர் எந்த ஊர் என்ற விவரம் கேட்டால் சரியான பதில் கூறவில்லை. சில நேரங்களில் மனநலம் பாதித்தவர் போல் பேசுகிறார். எனவே அவர் திருடும் முயற்சியில் சென்றாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

பீதி

அதிகாலை 3.45 மணிக்கு சிக்கிய வடமாநில வாலிபரை காலை 7 மணி வரை உடற்பயிற்சி கூடத்தின் படிக்கட்டில் உட்கார வைத்து இரு புறமும் போலீசார் பாதுகாத்தனர். பின்னர் காலை 7 மணிக்கு பிறகு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வடமாநில வாலிபர் கடைகளின் பூட்டை உடைத்த சம்பவத்தால் அண்ணா பூங்கா பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்களையும் கூடுதலாக நிறுவ வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story