பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி


பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்ற 25 பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

திருவாரூரில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட முயன்ற 25 பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு தடை

இந்த அறிவிப்பினால் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள மயிலாடுதுறை சாலை புதுத்தெரு பகுதியில் போக்குவரத்தை போலீசார் முற்றிலும் தடை செய்து, மாற்று வழியில் வாகனங்கள் இயக்கப்பட்டன. புதுத்தெருவிற்குள் யாரும் செல்லாத வகையில் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் வடக்குவீதியில் திரண்டனர். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராகவன், கண்ணன், மாநில செயலாளர் நாகராஜன், மாநில துணைத்தலைவர் உதயகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் பாலபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

125 பேர் கைது

புதுத்தெருவில் தடுப்புகள் அமைக்கப்பட்ட இடத்தின் அருகில் நின்று பா.ஜனதாவினர் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து முற்றுகையிட முயன்ற பா.ஜனதாவை சேர்ந்த 25 பெண்கள் உள்பட 125 பேரை போலீசார் கைது செய்து அவர்களை 2 அரசு பஸ்களில் ஏற்றி கொண்டு நாகை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

மயிலாடுதுறை பிரதான சாலை புதுத்தெருவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மயிலாடுதுறை, நன்னிலம் மார்க்கத்தில் இருந்து திருவாரூர் வரும் பஸ் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் கொடிக்கால்பாளையம், கீழவீதி வழியாகவும், திருவாரூரில் மயிலாடுதுறை, நன்னிலம் மார்க்கமாக செல்லும் பஸ், இதர வாகனங்கள் மேலவீதி, தென்றல் நகர், நாலுக்கால் மண்டபம் வழியாகவும் இயக்கப்பட்டன.

போக்குவரத்து பாதிப்பு

இதில் தென்றல் நகரில் இருந்து மயிலாடுதுறை சாலைக்கு திரும்ப முயன்ற அரசு பஸ் ஒன்று திருப்பத்தில் இருந்த ஆட்டோ மொபைல்ஸ் கடை வாசலில் இருந்த இரும்பு சீட், பஸ்சில் உரசியது. இதில் பஸ்சின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி உடைந்தது. மேலும் பஸ்சின் ஜன்னலுக்குள் இரும்பு சீட் சிக்கி கொண்டது.

இதனால் பஸ்சை நகர்த்த முடியாமல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் பயணிகள் உதவியுடன் பஸ்சில் இருந்து இரும்பு சீட் எடுக்கப்பட்டு, அங்கிருந்து பஸ் புறப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story