மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.
வெவ்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி நடந்தது. இதில் வாலிபர் ஒருவர் பிடிபட்டார்.
கணவருடன் சென்ற பெண்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வடக்கு வீதியை சேர்ந்தவர் பூவழகன் (வயது66). சம்பவத்தன்று இவர் தனது மனைவி ஜமுனாராணி உடன் தனது சொந்த ஊரான திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் உள்ள திருச்சென்னம்பூண்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அங்கு வேலைகளை முடித்துக் கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சைக்கிளில் திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
திருச்சென்னம்பூண்டி அருகே ராஜேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜமுனாராணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து செல்ல முயன்றனர்.
அப்போது அவர் சங்கிலியை விடாமல் பிடித்து கொண்டு கூச்சலிட்டார். இதனால் மோட்டார் சைக்கிளில் சங்கிலி பறிக்க வந்த 2 பேரும் அங்கிருந்து கல்லணை நோக்கி வேகமாக தப்பி சென்றனர்.
வாலிபர் பிடிபட்டார்
இதுகுறித்து கல்லணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவர்களை வழிமறித்தனர். அப்போது ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
மற்றொருவர் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி தப்பி ஓடிவிட்டார். போலீசாரின் விசாரணையில் பிடிபட்டவர் திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த குமரேசன் (வயது20) என்பது தெரிய வந்தது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் பூவழகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மற்றொரு பெண்ணிடம்...
பூதலூர் எஸ்.எஸ்.பி. காலனியில் வசிக்கும் தினகரன் (36) தனது தாயார் ஜெயராணி (58) உடன் ஸ்கூட்டரில் செங்கிப்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பூதலூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். புதுப்பட்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலை கிடங்கு அருகில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஸ்கூட்டரில் பின்னால் உட்கார்ந்து இருந்த ஜெயராணியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து செல்ல முயன்றனர். ஜெயராணி சங்கிலியை பிடித்து கொண்டு கூச்சலிட்டதால் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் தினகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.