குடியிருப்புகளை இடிக்க முயற்சிப்பதைகண்டித்து போராட்டம்


குடியிருப்புகளை இடிக்க முயற்சிப்பதைகண்டித்து போராட்டம்
x

சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலில் வீடுகள் இடிக்க முயற்சிப்பதை கண்டித்து பெண்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றலில் வீடுகள் இடிக்க முயற்சிப்பதை கண்டித்து பெண்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்புகள்

திருவண்ணாமலை தாலுகா சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது அப்பகுதி மக்கள் கால அவகாசமும், மாற்று இடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கேட்டனர்.

இவர்களுக்கு திருவண்ணாமலை அருகில் மலப்பாம்பாடி ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் பட்டா கொடுக்க வருவாய்த் துறை அதிகாரிகள் முடிவு செய்து ஆய்வு மேற்கொள்ள சென்றனர். ஆனால் சாணார்பாளையம் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர் முழக்க போராட்டம்

இந்த நிலையில் சோ.கீழ்நாச்சிப்பட்டு மக்கள் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து குடியிருப்புகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக் கோரி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரப்பத்திரன் தலைமை தாங்கினார். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் மாலினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் ஜெகன், சி.பி.ஐ. (எம்.எல்.) ஆறுமுகம், தலித் விடுதலை இயக்க மாநில இளைஞர் அணி செயலாளர் கிச்சா, மாநில மகளிர் அணி செயலாளர் தலித்நதியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story