போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி; 6 பேர் மீது வழக்கு


போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயற்சி; 6 பேர் மீது வழக்கு
x

ஓட்டப்பிடாரத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய முயன்றது ெதாடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முத்துராஜ் என்பவரின் சொத்துகளை அவரது மனைவி பொன்செல்வி (வயது 55) என்பவர் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கப்பட்டு பத்திரப்பதிவுக்காக வந்திருந்தது. இதில் முத்துராஜின் வாரிசு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது. அவர்களிடம் சமர்பிக்கப்பட்ட சான்றிதழ்கள் குறித்து சார்பதிவாளர் (பொறுப்பு) முத்துமாரியப்பன் விசாரித்தார். மேலும், ஆதார் எண்களை இணையத்தில் சரிபார்த்தார். அப்போது பத்திரப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பாலசவுந்தரியின் ஆதார் எண்ணை பரிசோதித்தபோது அதில் வேறொருவரின் பெயர் வந்தது. இதனால் சந்தேகமடைந்த சார்பதிவாளர் நடத்திய விசாரணையில் பாலசவுந்தரிக்கு பதிலாக முப்புலிவெட்டியை சேர்ந்த நட்டார் மனைவி ஒளிமுத்தம்மாளை அழைத்து வந்ததும் தெரியவந்தது. பத்திர ஆவணத்தில் பாலசவுந்தரியின் முகவரியை கொண்டு அதில் ஒளிமுத்தம்மாள் புகைப்படத்தை இணைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சார்பதிவாளர் முத்துமாரியப்பன் அளித்த புகாரின்பேரில் ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து புதியம்புத்தூர் மேலமடத்தை சேர்ந்த முத்துராஜ் மனைவி பொன்செல்வி (55), அவரது மகன் சுமன்ராஜ் (29), தூத்துக்குடியை சேர்ந்த மூர்த்திராஜா மனைவி சசிபாலா (28), பத்மநாபன் மனைவி பொன்சுமதி (25), புதியம்புத்தூர் மேலமடத்தை சேர்ந்த சுடலைமணி மனைவி பொன்னுத்தாய் (75), முப்புலிவெட்டி நட்டார் மனைவி ஒளிமுத்தம்மாள் (39) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story