குறைதீர்வு நாளன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு நாளன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு நாளன்று தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.
இருப்பினும் வாரத்திற்கு குறைந்தது இரண்டு பேர் விதம் மண்எண்ணெய் அல்லது பெட்ரோல் எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் நபர்களிடம் விசாரிக்கும் போது நீண்ட நாட்கள் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும், போலீசில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் அதனால் தான் தீக்குளிக்க முயற்சி செய்வதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்காணிப்பு பணியை...
இதுபோன்று தீக்குளிக்க முயற்சி செய்யும் நபர்கள் காலையிலேயே பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் வருவதற்கு முன்பே கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துவிடுகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு நுழைவுவாயில் மட்டுமின்றி விளையாட்டு அரங்கம் வழியாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகம் வழியாகவும், நீதிமன்றம் செல்லும் வழியில் உள்ள பாதை வழியாகவும் வரலாம்.
போலீசாரின் கண்காணிப்பு பணி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் போர்டிகோ பகுதியில் மட்டுமே உள்ளது. மற்ற பகுதியில் பெயரளவிலேயே போலீசார் நிறுத்தப்படுகின்றனர். தீக்குளிப்பு போன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட முயற்சி செய்பவர்கள் மற்ற பாதை வழியாக உள்ளே வர வாய்ப்புகள் உள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவத்தை தடுக்க குறைதீர்வு நாளன்று போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.