கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க வேண்டும்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாளன்று தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாளன்று தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு உதவித்தொகை, வீட்டுமனை பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிப்பதற்காக வருகின்றனர். இதனால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்திற்கு அன்றைய தினம் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர்.
மாவட்ட எல்லை பகுதியில் இருந்து வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், கலெக்டர் அலுவலகத்தில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் சேருவதை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிர்வாக காரணத்திற்காக செய்யாறு, ஆரணி வருவாய் கோட்ட அலுவலகங்களிலும், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
தீக்குளிக்க முயற்சி
இருப்பினும் கலெக்டரை நேரில் சந்தித்தால் தங்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று மாவட்டத்தின் அனைத்து பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகின்றனர். குறைதீர்வு நாளன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் வழி, ஒருங்கிணைந்த கோர்ட்டுக்கு செல்லும் வழி, வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழி ஆகியவை பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டு கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சமீப வாரங்களாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாளன்று குறைந்தது இரண்டு தரப்பினராவது தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
தீக்குளிக்க முயற்சி செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினாலும் இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாக நடைபெற்று வருகின்றது.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தீக்குளிக்க முயற்சி செய்பவர்களிடம் எதற்காக தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்டால் அரசு அலுவலகங்கள் மற்றும் போலீஸ் நிலையங்களில் பிரச்சினைகள் குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகளும், போலீசாரும் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்றே தெரிவிக்கின்றனர்.
இதனால் மனமுடைந்து போலீசாருக்கு தெரியாமல் மண்எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவற்றை கொண்டு வந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்வதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க குறைதீர்வு நாளன்று கூடுதல் போலீசார் அமர்த்தி தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும் என்றும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.