அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அத்தியூர் கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்தியூர் கிராம மக்கள் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வளாகத்தில் திடீரென்று அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி உள்ளிட்ட எதுவும் செய்து தரவில்லை.
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
பழுதான கைப்பம்புகள் சரி செய்யப்படவில்லை. கால்வாய்களை சீரமைக்கப்படவில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. மகளிர் பொது சுகாதார வளாகம் பராமரிக்கப்படுவதில்லை. குப்பைகள் ஊரின் அருகே கொட்டப்படுகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அப்போது கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்துவார் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரும் வந்து இதுவரை விசாரணை நடத்தவில்லை. எனவே எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
5 வார்டு உறுப்பினர்களும் மனு
இதையடுத்து அவர்களில் சிலர் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்துமனு கொடுத்து விட்டு வந்தனர். மேலும் அவர்களுடன் வந்த அத்தியூர் கிராம ஊராட்சி 1, 4, 5, 6, 7-வது வார்டு உறுப்பினர்கள் 5 பேர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை. இது தொடர்பாக நாங்கள் கடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் 2 நாள் கழித்து எங்களிடம் ஊராட்சி செயலாளர் தீர்மான நோட்டில் கையெழுத்து கேட்டார். வேலை ஏதும் நடைபெறவில்லை என்ற நாங்கள் கையெழுத்து போட மறுத்து விட்டோம். இதனால் செயலாளர் உங்களுக்கு அலுவலகத்தில் இருந்து கடிதம் வரும் என்று கூறிச்சென்றார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தலைமை ஆசிரியர் மீது புகார்
குன்னம் தாலுகா, ஓலைப்பாடி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்முருகனின் மனைவி பூங்கொடி கலெக்டரிடம் ஏ4 சீட் பேப்பர் பண்டலுடன் ஒரு மனு கொடுத்தார். அதில் குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து முடித்த எனது மகனை 10-ம் வகுப்புக்கு வேறு பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளிக்கு மாற்று சான்றிதழ் வாங்க சென்றேன். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் ஏ4 சீட் பேப்பர் பண்டல் வாங்கி கொடுத்தால் தான் மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனால் தான் ஏ4 சீட் பேப்பர் பண்டல் வாங்கி வந்துள்ளேன். இதனை அந்த தலைமை ஆசிரியரிடம் கொடுத்து எனது மகனின் மாற்று சான்றிதழை பெற்று தர நடவடிக்கை எடுக்கவும், தலைமை ஆசிரியருக்கு தக்க அறிவுரை கூறவும் என்று கூறியிருந்தார்.
அரசு பள்ளி மாணவிகள் மனு
அரும்பாவூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகளில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாங்கள் விடுதியில் தங்கி பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 223 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் அவர் சமூக நலன் மகளிர் உரிமைத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒன்று மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் 19 பெற்றோர்களிடம், அவர்களது குழந்தைகளின் பெயரில் ரூ.9.50 லட்சம் செலுத்தப்பட்டதற்கான வைப்பு தொகை பத்திரத்தினை வழங்கினார்.