தண்டவாளத்தில் பிணமாக கிடந்த ஏட்டு-காரணம் என்ன? போலீசார் விசாரணை
சிவகங்கையில், ஆயுதப்படை போலீஸ் ஏட்டு, தண்டவாளம் பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கையில், ஆயுதப்படை போலீஸ் ஏட்டு, தண்டவாளம் பகுதியில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிணமாக கிடந்தார்
சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவு போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை சிவகங்கையில், தொண்டி ரோடு ெரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் ஏட்டு சரவணனுக்கு சங்கரேசுவரி (32) என்ற மனைவியும், லாவன் (7) என்ற மகனும், தமிழினி (3) என்ற மகளும் உள்ளனர். சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சரவணன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.