கள்ளழகர் கோவிலில் இன்று ஆடி தேரோட்டம்- மதுரையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
கள்ளழகர் கோவிலில் இன்று ஆடி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அழகர்கோவில்
கள்ளழகர் கோவிலில் இன்று ஆடி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கள்ளழகர் கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடிப்பெருந்திருவிழா ஆகும். இந்த திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் அன்னம், சிம்மம், அனுமார், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இன்று தேரோட்டம்
இதையொட்டி கோவிலில் தேர்அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளுகிறார்.
இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். ஆடி தேரோட்டத்தைெயாட்டி கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கினார்கள்.
சுகாதார வசதி ஏற்பாடுகளை அ.வலையபட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் செய்துள்ளது. 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தேரோட்ட விழா முடிந்து இன்று இரவு பதினெட்டாம் படி கருப்பணசாமி கோவிலில் சந்தனம் சாத்துபடியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும், நாளை 2-ந் தேதி புஷ்ப சப்பரம், 3-ந் தேதி ஆடி 18-ம் பெருக்கு உற்சவ சாந்தி நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சிறப்பு பஸ்கள்
கள்ளழகர் கோவில் தேர் திருவிழாவிற்கு மதுரை, மேலூர் மற்றும் எம்.சத்திரப்பட்டி வழியாக ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அழகர்கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் மூலம் வரவுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணி வரை மட்டும் மதுரையில் இருந்து அழகர்கோவில் வழியாக மேலூர் செல்லும் பஸ்கள் வலையபட்டி வழியாக மரக்காயர்புரம் சென்று பின்பு மேலூர் செல்லும் வகையிலும், மேலூரில் இருந்து அழகர்கோவில் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் மரக்காயர்புரம் சென்று நாயக்கன்பட்டி வழியாகவும், மதுரைக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ேதர்த்திருவிழாவிற்காக மேலூரில் இருந்து அழகர்கோவிலுக்கு 20 சிறப்பு பஸ்களும், மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அழகர்கோவிலுக்கு 30 சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சிறப்பு பஸ்களை பயன்படுத்துமாறு மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.