ஆடி கடைசி வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


ஆடி கடைசி வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

சேலம்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா மற்றும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.

தாலிக்கயிறு அலங்காரம்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சேலம் எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவசம் மற்றும் வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சேலம் அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவிலில் தாலிக்கயிறுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story