மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கான தணிக்கை குழு கூட்டம்


மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கான தணிக்கை குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கான தணிக்கை குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பினை தளர்த்தி உதவித்தொகை வழங்குவதற்கான தணிக்கை குழு கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகைகள் வழங்க பெற்றோர்கள் மனுக்கள் வழங்குகின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் மூலம் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது.

18 வயதிற்கு கீழ் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் உதவித்தொகைகள் வழங்கிட வழிவகைகளை உருவாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு துறையின் மூலம் உதவித்தொகை வழங்க கலெக்டரை தலைவராகக் கொண்டு சமூக பாதுகாப்புத் துறை துணை ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் அரசு எலும்பு முறிவு மருத்துவர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட தணிக்கை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒப்புதல் அளிக்கும்

இந்த தணிக்கை குழுவின் ஒப்புதலை பெற்று 18 வயதிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வயது வரம்பை தளர்த்தி குழந்தைகளுக்கான உதவித்தொகைகள் வழங்க இக்குழு ஒப்புதல் அளிக்கும்.

இதுவரையில் கலெக்டர் மற்றும் தாசில்தார்களிடம் அளிக்கப்பட்ட 153 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்க குழு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், சமூக பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை சார்பாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 உதவித்தொகை குழந்தைகளுக்கு மாதம் விடுவிக்கப்பட உள்ளது.

ரூ.2 ஆயிரம் உதவித்தொகை

18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உடல் ஊனம் 75 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2,000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகவே குணப்படுத்த முடியாத உடல் ஊனம் மற்றும் 18 வயதிற்கு கீழே உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று, மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பித்துக் குழுவின் ஒப்புதலுக்கு பின்னர் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், சமூக பாதுகாப்புத்துறை துணை ஆட்சியர் தரகேஸ்வரி, எலும்பியல் மருத்துவர் கீர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story