ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்


ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்
x

விபத்தில் மூளைச்சாவு அடைந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

வேலூர்

உடற்கல்வி ஆசிரியர்

திருவள்ளுவர் மாவட்டம் வீரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எபிநேசன் (வயது 48). இவர் திருத்தணி அருகே உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். எபிநேசன் கடந்த 21-ந் தேதி மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ராணிப்பேட்டை அருகே உள்ள மருதாலம் கூட்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட எபிநேசன் பலத்த காயமடைந்து ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

உடல் உறுப்புகள் தானம்

இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய மனைவி கலைச்செல்வி தனது கணவர் எபிநேசன் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட இதயம், நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் இடதுபுற சிறுநீரகம் ராணிப்பேட்டை சி.எம்.சி. மருத்துவமனைக்கும், வலதுபுற சிறுநீரகம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. தானமாக பெறப்பட்ட உடல்உறுப்புகள் அதற்காக பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கு பொருத்தப்பட்டன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மூளைச்சாவு அடைந்த ஆசிரியர் எபிநேசனுக்கு, பால்ஆபிரகாம், கிரேஸ்சன் என்று 2 மகன்களும், கேத்ரீன் ரோஸ் என்ற மகளும் உள்ளனர்.


Next Story