ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் சூறை; 2 பேர் கைது
மதுரையில் ஆட்டோ, 2 மோட்டார் சைக்கிள்கள் சூறையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்ப்பவர் முருகேசன் (வயது 49). சம்பவத்தன்று பாருக்கு 4 பேர் மது குடிக்க வந்தனர். அவர்கள் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் வாங்கிவருமாறு முருகேசனிடம் தகராறு செய்தனர். அவர் வாங்கி தர மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த டியூப்லைட்டை உடைத்தனர். மேலும் முருகேசனை தாக்கி விட்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரம் கழித்து வில்லாபுரம் சின்ன கண்மாய், தென்றல் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சித்திக் (37) என்பவரின் ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிளை 4 பேர் அடித்து சூறையாடி விட்டு தப்பி சென்றதாக ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இருசம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை பிடிக்க போலீசார் அந்த பகுதி முழுவதும் ரோந்து சென்றனர். அப்போது வில்லாபுரம் பகுதியில் மறைந்திருந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் வில்லாபுரம், மீனாட்சி நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (20), கீரைத்துறை மேலத் தோப்பு சரவணன் (20) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கீரைத்துறையை சேர்ந்த நாகேந்திரன், சரவணமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.