ஆவடி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த ஆட்டோ - 3 பேர் காயம்
ஆட்டோ பழுது பார்க்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி,
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் ஆட்டோ பழுது பார்க்கும் டிங்கரிங் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெல்டிங் பண்ணும் போது ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மெக்கானிக் பிரசாந்த் அவரது நண்பர்களுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் ஆட்டோ எரிந்து சேதம் அடைந்தது.
இந்த தீ விபத்தில் பிரசாந்த், சீனிவாசன் (45) உள்ளிட்ட 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டோ பழுது பார்க்கும் பணியில் திடீரென ஆட்டோ தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.