நெல்லை அருகே ஆட்டோகவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலி


நெல்லை அருகே பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலியானான். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை அருகே பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி. மாணவன் பலியானான். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

எல்.கே.ஜி. மாணவன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீீவைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் அதே ஊரை சேர்ந்த அந்தோணி மகன் ராஜி என்பவர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

அவர் நேற்று காலை பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஊத்துபாறையை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் (வயது 5), முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன்குமார், மகள்கள் செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா, வசவப்பபுரத்தை சேர்ந்த ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 8 மாணவ-மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதில் செல்வநவீன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மாணவன் ஆவான்.

ஆட்டோ கவிழ்ந்து சாவு

அனவரதநல்லூர் இந்திராநகர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் அனைவரும் இடுபாடுகளில் சிக்கி கதறி கூச்சலிட்டனர். சிறுவன் செல்வநவீன் ஆட்டோக்கு அடியில் சிக்கிக் கொண்டான். இதில் அவன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

ஆட்டோவில் இருந்த மற்ற 7 மாணவ-மாணவிகளில் முகிலா, நவீன்குமார் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதுகுறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்த செல்வநவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த முகிலா, நவீன்குமார் ஆகியோர் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

விபத்து நடந்ததும் ஆட்டோ டிரைவர் ராஜி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, ராஜியை பிடித்து கைது செய்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரனையில், டிரைவர் ராஜி ஆட்டோ ஓட்டி சென்றபோது செல்போனில் பேசியபடி சென்று உள்ளார். அப்போது அவரது செல்போன் தவறி கீழே விழுந்து உள்ளது. அதை எடுக்க சென்றபோது, ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரியவந்து உள்ளது.

பள்ளிக்கு அழைத்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-----------------

(பாக்ஸ்) பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே

சிறுவன் பலியான சோகம்

ஊத்துபாறையை சேர்ந்த ராஜா-சரோஜா தம்பதியின் மூத்த மகன் தான் செல்வநவீன். 2-வது மகள் சிவரஞ்சனி (3). செல்வநவீனை அவனது பெற்றோர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்த்தனர். அவனை ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தனர். அதன்படி நேற்று தங்களது மகனை ஆசை, ஆசையாக முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். ஆனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் பாதி வழியிலேயே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செல்வநவீன் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.


Next Story