தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
வடமதுரை அருகே தொழிலாளியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யபட்டார்.
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 27), சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், தென்னம்பட்டியில் இருந்து அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறினார். அந்த ஆட்டோவை எலப்பார்பட்டியை சேர்ந்த ஆனந்த்சுகன் (25) ஓட்டினார். ஆட்டோவில் சூர்யா என்பவரும் அமர்ந்திருந்தார்.
அப்போது சூர்யா, சேகர் வைத்திருந்த மதுபான பாட்டிலை தனக்கு தருமாறு கேட்டார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஆனந்த்சுகன் ஆட்ேடாவை நிறுத்தினார். பின்னர் ஆனந்தசுகன், சூர்யா ஆகியோர் சேர்ந்து சேகரை தாக்கிவிட்டு ஆட்டோவில் சென்றுவிட்டனர்.
இதில் காயமடைந்த சேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்த்சுகனை கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை வலைவீசி தேடி வருகிறார்.